சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘ஊட்டச்சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில்:
பொது மக்கள் யாரும், தங்களிடம் மருத்துவ கல்லுாரிகளில் இடம் வாங்கி தருகிறேன்; வேலை வாங்கி தருகிறேன்; மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி செய்கிறோம் என்று கூறுபவர்களிடம் ஏமாற வேண்டாம். இந்த அரசு முழுமையாக வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது. இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். என்னிடமே தினமும், 200 பேர் பல்வேறு மருத்துவ உதவிகள் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் தொடர்ந்து, அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பிறந்த பச்சிளம் குழந்தை முதல் ஆறு மாதம் வரையிலான குழந்தைகள், கர்ப்பிணியர் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில், இத்திட்டம், 2022 மார்ச் 1ல் துவக்கப்பட்டது. இத்திட்டத்தில், ஊட்டச் சத்து குறைபாடு கண்டறியப்படும், கர்ப்பிணியர், குழந்தைகளின் தாய்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. இதன் பயனாக, 77.3 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டில் இருந்து மீண்டுள்ளனர்.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை, அவரது தந்தையை வெட்ட அனுமதித்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாக்டர் மீது, மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வலைதளத்தில் வெளியிட்டதற்காக, ‘யு டியூபர்’ இர்பானுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு பதில் பெறப்பட்டுள்ளது. அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், எந்த செய்தியையும் தெரிந்து கொள்ளாமல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுகிறார். என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.